வட்டார "வழக்கு"

*வட்டார "வழக்கு"*

   வளரும் வயதில் வீட்டிலோ உறவினர் வீடுகளிலோ கொங்குத் தமிழின் ஆட்சிதான் பரிபூரணமாக இருந்தது.. பள்ளிக் காலத்திலும் கல்லூரியிலும் ஈரோட்டில் விடுதியில் தங்கியிருந்தாலும்  கொங்குத் தமிழைத் தவிர எதுவும் அதிகமாக காதில் விழுந்த மாதிரி நினைவில்லை. என்னுடைய வட்டம் அவ்வளவு  குட்டியானது!!
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து குட்டி கிராமத்திலிருந்து  பெரிய்ய சென்னை மாநகருக்கு இடம் பெயரும் வரை இதே நிலை தான்.  திரைப்படம் மூலமும் வார இதழ்கள் வாசிப்பதன் மூலமும் ஓரளவு பரிச்சயப் பட்டிருந்தவை -ஆத்து பாஷையும் மெட்ராஸ் பாஷையும் தான்.

சென்னை வந்தப்புறம் தான் "அடடா தமிழில் இத்தனை வகைகளா" என்று ஆச்சரியப் பட்டுப் போனேன்!!
இந்தி தெரியவில்லை என்றால் தென்னிந்தியா தாண்டினால் அவ்ளோதான் என்று கேள்விப் பட்டதுண்டு. ஆனால் ஈரோட்டைத் தாண்டி சென்னைக்கு வந்தாலே கொங்குத் தமிழ்  அவங்களுக்கும் சென்னை செந்தமிழ் நமக்கும் புரியாம போகும்னு தெரிஞ்சப்ப ஒரு பயம் வந்தது நிஜம். அப்போது  ஆங்கிலம்  ஓரளவு கை கொடுத்தது. ஆனாலும்இந்த வட்டார வழக்குகள் தந்த  சுவையான அனுபவங்கள் மறக்க முடியாதவை.

 குடும்ப சகிதமாக  கிராமத்திலிருந்து சென்னை வந்து இறங்கியதுமே அந்த வீட்டு காவலாளி "இன்னா சார் இம்மா லேட்டா இம்மாம் பெரிய கும்பலை இட்டாந்திருக்கே . சாவி என்னாண்ட வச்சுக்கிட்டு நாஷ்டா கூட துண்ண போ முடில.  படா பேஜாரு"னு  பெரிய குரல்ல ஆரம்பிச்சதுமே எனக்கு லூஸ் மோகனை பாக்கற மாதிரியே தான் இருந்துச்சு.

வாங்க போங்க ஆமாங்க இல்லைங்க ஏனுங்க ன்னு கேட்டே பழக்கப் பட்டிருந்த காது   வா போ நீ  ன்னு வலிச்சே  போச்சு !!
 'ஈரோட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ' என்று புதிதாகக் குடியேறிய  வீட்டுச் சொந்தக்காரர் சொல்லிக் கேட்பதற்குள்  ஆறு வருடங்கள் ஓடியிருந்தது.ஒரு குடும்பமாகப் பழகும் நல்ல நட்பும் அமைந்தது.

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்குள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்து விட்டார்கள். பசிக்குமே என்ற நினைப்பில் என் மகனைப் பார்த்து "என்னடா, தோசை வாத்து தரவா?" என்று கேட்டிருக்கிறாள் என் ஐயங்கார் தோழி.என் அப்பாவி மகன் என்ன சொன்னான் தெரியுமா?
"தோசை மட்டும் தாங்க ஆண்ட்டி. வாத்து  எல்லாம் வேண்டாம்"😂😂.
இன்றும் அவ்வப்போது நாங்கள் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மகிழ்வதுண்டு.

நம்ம மொழி அவங்களுக்குப் புரியாமல் இருக்கும் வாய்ப்புக்களும் அதிகம்.அடுத்த நாள் சாயங்காலம் என் தோழியின் குட்டி மகள் எங்க வீட்டுக்கு  வந்தாள்.
'என்னம்மா. ரெண்டு தோசை சுட்டுத் தரவா?" என்றேன்.
"எப்பிடி ஆண்டீ.. தோசைய உங்காத்துல துப்பாக்கில சுடுவேளா?" என்று அப்பாவியாய்க் கேட்டாளே பாக்கலாம்"!!!

அங்கு நாங்கள் குடியிருந்த பத்து வருடங்களும் அக்ரஹார பாஷை வெர்சஸ் கொங்கு பாஷை காமெடி நடந்துக்கிட்டே தான் இருக்கும்.

"என்ன இன்னிக்கு  லஞ்ச்?"
"கொள்ளுப் பருப்பு."
"குதிரைக்கு வக்கிறதை நீங்களும் சாப்பிடுவீங்களா"
"குதிரை மாதிரி ஆகலாம். கொஞ்சம் சாப்பிடேன்"
இபப்படி ஆரம்பிச்சு கொள்ளு பருப்பு ஐயங்கார் ஆத்துல மெய்ன் மெனுவாக சீக்கிரமே மாறியது தனிக்கதை.

ஆத்து பாஷையிலும்  இன்னும் வேறுபட்டது ஐயங்கார் ஆத்து பாஷை. ஆரம்பத்தில கேட்கும் போது எனக்கு ஜெர்மன்  போலவே தான்  இருந்தது. அப்புறமாக அதன் அழகுத் தமிழ் புரிய ஆரம்பித்த போது  ரசிக்கத் தொடங்கினேன்.
  சாத்தமுது என்று ரசத்தையும் கறியமுது   என்று பொரியலையும்  ரசனையோடு சொல்வது அழகு.
 சமையல் ஆகிவிட்டதா  என்பதை' 'தளிகை ஆயிடுத்தா'னு கேக்கும் போது  புரியாமல் விழித்த நாட்கள் நிறைய..

ஒன்றாக  இருவரும்  வாரம் இரண்டு முன்று முறை ஷாப்பிங் அது இதுன்னே எதுக்காச்சும்  வெளியேசெல்வதுண்டு. வெளியில் கிளம்பும் போது "இரு. செருப்பைத் தொட்டுட்டு வரேன்" என்றதும் "இது மெட்ராஸ்மா. வெறுங்கால்ல செருப்பில்லாம போக முடியாது. செருப்ப மாட்டிட்டு வா"என்று என் தோழி சீரியஸாகச் சொல்வாள். 

"ஒரம்பரை வர்றாங்க இன்னிக்கு"
"அதுயாரு அப்படின்னா?"
"ம்.செவ்வாய் கிரகத்திலருந்து ஏலியன்ஸ் வர்றாங்க.அவங்களுக்குத் தான் இந்தப் பேரு" என்று  நான் நக்கலடித்த நாட்கள் தான் எத்தனை!!

சர்க்கரைப் பொங்கல் அக்கார வடிசலாகவும் பாயசம் திருக்கண்ணமுதாகவும் நாமகரணம் செய்யப் பட்டதை தெரிஞ்சுக்கவே எவ்வளவோ நாட்களாச்சு எனக்கு!
அப்பா அம்மா ஊர்லருந்து வந்து விட்டால் அவங்க சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கறதே என் பக்கத்து வீட்டுக்கு பெரிய பொழுது போக்கு.

 "ரயிலுக்கு ஊர்லருந்து எந்நேரம் கெளம்பினீங்க?"
ஒரு கேள்வி தான். அப்பாவின் சரமாரியான  கொங்குத் தமிழ்ப்  பதிலில்  மயக்கம் போட்டு , அடுத்த கேள்வி  வரவே வராது!!

 "விடி காத்தால பயணப் படோணுமுன்னா  ரவைக்கு எங்கீங் தூங்க முடியுது. கோழியூப்பட  பாலைப் பீச்சீட்டு பண்ணையத்தாள் சவாரிவண்டி பூட்டி பூந்துறைல கொணாந்து உட்ருவானுங்க.  அவத்திக்கு சித்த நின்னாத்தே  பஸ்   வருமுங்க.  ஸ்டேஷன் கிட்ட வாரக்கும் ரயில் வந்து நிக்கறக்கும் செரியா இருக்குமுங்க. பத்து நாள்ல
மதியம் வருதுங்க. அதுக்குள்ள ஊருக்குப் போகோணுமுங்க.இல்லாட்டி பண்ணையம் பாச்சலாயிருமுங்க"

காலைல தானே வந்தீங்க. அதுக்குள்ளே எப்படீ மதியம் போறதுன்னு  கேக்கறவங்க குழம்பிருவாங்க.

அப்பா சொல்ற மதியம்-பௌர்ணமி!!
சுத்தத் தமிழுங்க. மதின்னா நிலவு. முழுசா தெரியறதுக்கு மதியம்னு பேரு அப்படீன்னு பொழிப்புரை தர வேண்டி இருக்கும்!!

ரவைக்கு உப்புமா தானடி வரும். தூக்கம் எப்பிடி வரும்னு அடுத்த கேள்வி வரும். ரவைன்னா ராத்திரின்னு அடுத்த விளக்கம் தரணும்.
 
"ஈக்குமார் இருக்குமா ஆண்ட்டி ""குமார்னு இங்க யாரும் இல்லையேம்மா.இனிஷியலோட கேக்கறயே"
"மாடிப்படில தண்ணி அடிச்சுடோணும்"
"அட!தென்னந் தொடைப்பமா?"
"ஆமாங்க "

இப்படியான உரையாடல்கள் தினம் ஒரு முறையாவது கேலியிலும் சிரிப்பிலும்  முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு  பேச்சு வழக்கு உண்டு.
 வேலூர் வட ஆற்காடு பக்கம்
 ."அவங்க கைல சொல்லிர்றேன்" என்பார்கள். கையில எப்படி சொல்றதுங்கற குழப்பமும் 'நம்ம வீட்டாண்ட இட்டாந்தர்றேன்' என்றால் புரிஞ்சும் புரியாத நிலைமையுமே மிஞ்சும்.

காரைக்குடி மதுரை திருநெல்வேலி ,நாகர்கோவில்,கன்யாகுமரி மக்கள் என நட்பு வட்டம் விரிந்து கொண்டே சென்றபோது தான் தமிழில் இத்தனை வட்டார வழகாகுகளா என்று புரிந்தது. நந்தவனத்தில் எந்த மலர் அழகு? ஒவ்வொன்றுக்கும் ஒரு மணம் நிறம் உண்டு.. வட்டார வழக்கும் அப்படித்தான்.

மதுரை பாஷையை பரிச்சயப் படுத்தியதில் திரைப் படங்களுக்கு பெரும் பங்கு உண்டு வசனங்களைப் புரிந்து கொள்ள இரண்டு மூன்று முறை கூட சில படங்களைப்  பாத்திருக்கிறேன்.
"வந்திருவாய்ங்க" மொழி பிடிபட சில காலம் எடுத்தது உண்மை.

சென்னை செந்தமிழ்  ரிக்ஷாக்காரர்களின் குப்பத்து மொழி என நான் நினைத்திருக்க பக்கத்து வீட்டில் இருந்த மெத்தப் படித்த ஆடிட்டர் நண்பர் "இன்னா மேடம் !எப்பிடிகிறீங்க " என்று பேசினால் எனக்குஅதிர்ச்சி!! நான் என்னவரை "மச்சான் " என்று அழைப்பது அவர் குடும்பத்தார்க்கோ பேரதிர்ச்சி!!பெரும்பாலும் ஆங்கிலமே   சென்னையின் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் உரையாடல் மொழியாக இருக்கிறது..

மலேசியத் தமிழர்களின் ''என்ன லா' வும் 'கோசமு'ம்  'பசியாறியாச்சா" என்ற அக்கறையும் தனி இனிமை.
ஸ்விட்சர்லாந்து கனடா லண்டன் பயணங்களின் போது காதில் விழும் இலங்கையர்களின் சந்தத் தமிழோ இதயம் நனைப்பது.
 சென்னையிலையே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்தும்  மார்வாடிகள் பேசும்   செவிப்பறை வலிக்கும் சௌகார்பேட் தமிழோ பெரும் தண்டனை! 

 புதிதாக சந்திக்கும் நபர் தமிழில் உரையாடினால் உடனே " இவர் எந்த மாவட்டம்?
எந்த மாநிலம்?
எந்த நாடு?" என அவரது உச்சரிப்பைக் கூர்ந்து கவனித்து நான் யூகம் செய்வது எனக்குப் பிடித்தமான விஷயம்.. பெரும்பாலும் அது சரியாகவும் இருக்கும்.

தமிழை எப்படிப் பேசினாலும் கேட்பதற்கு இனிமை தான் என்றாலும் "கொங்குத் தமிழ்ப் பேச்செனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே..."ங்கறது  நெசந்தான்!

Comments

Popular posts from this blog

உணவல்ல உணர்வு!

தூரி நோம்பி

சகிப்பதேன் சகியே..?!