சகிப்பதேன் சகியே..?!

சகிப்பதேன் சகியே...?!



"வலிமையான கேள்விகள் பொருத்தமான தேவையான  பதில் கிடைக்கும் வரை  ஓய்வதில்லை "
 -  ஈரோடு கதிரின் வரிகள் இவை. எனக்குள்ளும் அப்படி ஒரு கேள்வி  உறுத்திக் கொண்டே இருந்தது. நெருங்கிய வட்டத்தில் நடந்திருந்த ஒரு சம்பவத்தால்  அக் கேள்வி விஸ்வரூபமெடுததிருந்தது.

இன்றைய இளம் பெண்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அசால்ட்டாக சிக்கலான  சூழல்களைக் கையாளும் திறனும் பார்க்கும் பொழுது     பல சமயங்களில் பெருமையாகவும்  சில சமயங்களில் பொறாமையாகவும்(!) கூட உணர்வதுண்டு.

ஆனால் "பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல்"என்ற விஷயத்தால் இன்று பாதிக்கப் படும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே  செல்கிறது என்று வாசிக்கும் பொழுது மனதில்   ஒரு விதமான பாரம் கூடுவதைத் தவிர்க்க இயலவில்லை.  "இதெல்லாம் சகஜமப்பா" என்று சாதாரணமாகக் கடக்க முடியாத  கடக்கக் கூடாத ஒரு நிகழ்வல்லவா இது.

 "பெண்களின் பெயரை விட நீளமான பட்டங்களும்  நான்கு இலக்க ஐந்து இலக்கங்களில் வாங்கும் கனவுச் சம்பளமும் அவை கொடுக்கும் தன்னம்பிக்கையும் பணியிடத்தில் அவர்களுடைய சுய பாதுகாப்பை உறுதி செய்கின்றனவா? இல்லை என்றால் ஏன்? இப்போது கூட இல்லை என்றால் வேறு எப்போது?  பெண்கள் செய்ய வேண்டியது என்ன?"  என்பது தான் என் கேள்விகளின் சாரம்.

கட்டிட வேலையில் சித்தாளுக்கு கொத்தனாரிடமிருந்து பாலியல் அச்சுறுத்தல் என்பதில் ஆரம்பித்து  நவீன சொர்க்கங்களாக உணரப்படும்  படித்தவர்களால் நிரம்பி வழியும் பாஷான அரசு/கார்ப்பரேட் அலுவலகங்களில் சக அலுவலர்களால் /மேலதிகரிகளால் பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் என்பது வரை எங்கெங்கும் இது நிறைந்துள்ளது என்ற நிஜம்  சுடுகிறது . 

பொருத்தமான பதிலைத் தேடி என் கேள்வி சென்று தட்டிய மனக்கதவு
டாக்டர். வசந்தகுமாரி ஜெயராமனுடையது. இருபது ஆண்டுகளுக்கும் மேல் உளவியல் ஆலோசகர்   பயிற்சியாளர்அங்கீகாரம்
பெற்ற  POSH கார்ப்பரேட் பயிற்சியாளர். 30க்கும் மேற்பட்ட பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆலோசகர் மற்றும்  POSH கமிட்டி உறுப்பினர்.அனைத்திற்கும் மேல் என் இருபதாண்டுக் கால நல்நட்பு.

அதென்ன POSH ?
Prevention Of Sexual Harassment in the workplace என்பதன் சுருக்கம். 2013 ல் இது சட்டவடிவம் பெற்றது.

எனக்குப் பல ஆச்சர்யங்களும்  அதிர்ச்சிகளும் அழுத்தங்களும் ஒருசேரக்  காத்திருந்தன அவரது தெளிவான பதிலில் என்பதே உண்மை!

"பணியிடத்தில்  பாலியல் பிரச்னைகள்" என்பது நவீன யுகத்திலும் பெண்களுக்கு விடப்படும் ஒரு சவால்னு சொல்வேன். ஆனால்  பிரச்சினை வராமல் தடுப்பதற்கான  வழிகளில்  நாம் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தலாம் என்பது என்னோட அனுபவம் சொல்லும் உண்மை.

இப்போது  கூட  ஏன் இப்படி? படித்தவர்கள் கூட ஏன் இப்படி? இந்த ஆராய்ச்சிக்கெல்லாம்  இப்போது போக வேண்டாம். இது ஒரு பிரச்னையாக உருவெடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

முதல் விஷயம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஒரு விழிப்புணர்வு இளம் பெண்களுக்கு வேண்டும். படிப்பிலும் வேலையிலும்  மொபைலிலும் மூழ்கி அவர்கள் ஒரு தனி உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். வெளிஉலகம் பற்றிய சுய புரிதல்  வேண்டும்.
பணிபுரியும் பெண்களில் இரண்டு வகையினரை நான் பார்க்கிறேன்
 ஒன்று ரொம்ப அக்ரெஸிவ். எல்லாவற்றுக்கும் பிரச்னை செய்து கவனம் ஈர்ப்பவர்கள்.தீர்வைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள்.  இரண்டாவது சப்மிஸிவ். சுய பச்சாதாபத்தில் மூழ்கியவர்கள். வேலை பார்த்தாக வேண்டிய குடும்ப சூழலும் ஒரு காரணம். எல்லைமீறும்  எல்லாவற்றையும் சகித்துக் கொள்பவர்கள். என் சம்பளம் இல்லாவிட்டால்  என்ன ஆகும் என்று அச்சம் கொள்பவர்கள்.  இந்த இரண்டு விதமான  அணுகுமுறையும்  சரியில்லை என்று தான் சொல்வேன்.

நான் அணுகும் புகார்களில் பலவற்றிற்கு ஆதி புள்ளி எதுவென  என்று நான் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கும்.

முக்கியமாக இரண்டு விஷயங்களை சொல்லலாம்.
ஒன்று உடன் பணிபுரியும் பெண்களை ஆண்கள் செல்லப்  பெயர் வைத்துக் கூப்பிடுவது . நட்பு என்ற எல்லைக்குள் எதுவுமே தவறில்லை எனத் தோன்றலாம்.ஐடி/பேங்கிங்/ உற்பத்தித் துறை  என்றும் எங்கும் இருக்கிறது இந்த ஸ்டைல்.
 ஹனி ஸ்வீட்டி என ஆரம்பித்து   மடோனா, பமீலா, சன்னி லியோன் என மாறும் போது  இங்கே  புகாராக வந்து நிற்கிறது.  உடன்பாடில்லை என்றால் அதை ஆரம்பத்திலேயே! சொல்லிவிடலாமே. தயங்குவதால் தான் பெண்களுக்குப் பிடித்துள்ளது என் புரிந்து கொள்ளப் பட்டு அடுத்த நிலைக்கு அது முன்னேற்றம் அடைகிறது.

இரண்டாவது விஷயம் அன்பளிப்புகள்."நோ ஃப்ரீ லஞ்ச்" என்பது நமக்குத் தெரியும். புகாரை விசாரிக்கும் போது "இதுவரை நான் கிஃப்ட்டுக்கே  மூணு லட்ச ரூபா செலவழிச்சிருக்கேன்  மேம்" என்று ஒரு குண்டு வந்து விழும்...

குறிப்பாக அப்ரெய்சல் சமயங்களில் நிறைய  அச்சுறுத்தல்புகார்களை சந்திக்கிறோம். பெண்கள்  தைரியமாக புகார் கொடுப்பது நல்ல முன்னேற்றம். ஆனால் பல சமயங்களில் அது தாமதமாக நடக்கிறது.

 "பணிபுரியும் இளம் பெண்களுக்கு நீங்கள் பர்சனவாகச் சொல்ல விரும்புவது என்ன?" என்றேன்.
"உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க. விழிப்பா இருங்க.
நட்பு அழைப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ள மெல்லிய கோட்டினை இளம் பெண்கள் இனம் காண வேண்டும்.சுய கருத்தினை தேவையான போது  உறுதியாக வெளிப்படுத்த  வேண்டும்.

"லஞ்சுக்குப் போகலாம்  வர்றீங்களா? என்பதற்கும் ப்ராஜக்ட் வேண்டுமென்றால்  லஞ்ச்சுக்கு வந்து தான் ஆகவேண்டும் என்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

கறுப்பு ட்ரெஸ்ஸில் நீங்கள் ஸ்மார்ட் ஆக இருக்கிறீர்கள் என்பதற்கும்  யூ லுக் ஹாட் என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

இளம் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்
 "தீர்க்கமாகவும் சுயசிந்தனையோடும் இருங்கள். மனதில் பட்டதைத் தெளிவாகப் பேசுங்கள். "அச்சம் தவிர்" என்ற வரியே பாரதி நமக்காக எழுதியது தான்!.

எந்த சூழலிலும் விழிப்புணர்வும் வாழ்க்கை பற்றிய தெளிந்த அறிவும் அச்சமில்லாத மனமும் தான் புதுமைப் பெண்ணின் அடையாளங்கள்!" என்று முடித்தார்.

என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. ஆனால் என் மனதில் அவை எழுப்பிக் சென்ற சிந்தனை அலைகள் ஏராளம் ஏராளம்.

சூப்பர் விமன் என்றும் புதுமைப் பெண் என்றும் சமூகம்  வரையறை செய்துள்ள நிலையில் உள்ள பெண்களுக்கே இத்தனை பாலியல் அச்சுறுத்தல்கள் என்றால்.....!!

படிப்பு பணம் என்ற இரண்டு பேராயுதங்கள்  கைகளில் இருக்கும் போது  மிகவும் தேவையான  சமயங்களில்  கூட போராடவில்லை என்றால்  ஆயுதங்களால் என்னபயன்?நாம் சரிசெய்ய வேண்டிய இடம் எது? என்று எனது தேடல் மீண்டும் கேள்விகளில் வந்து  நின்றது.

இது ஒரு அறிமுகமே!பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல் பற்றி இன்னும் நிறைய எழுதவே மனம் விழைகிறது! வாய்ப்பு வரும் போது தொடரலாம்.

சகிக்காதே சகியே!  உனக்கான
சுய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது நீயே தான்!!

Comments

Popular posts from this blog

உணவல்ல உணர்வு!

தூரி நோம்பி