உணவல்ல உணர்வு!
உணவல்ல உணர்வு!
எதையோ தேடி அலைந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்களுக்குள் மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும் அந்திச்சூரியனின் தங்கநிறம், வாகன இரைச்சல் இல்லாததால் காதை வருடிய கூடு திரும்பும் பறவைகளின் குரலோசை, காற்று மாசுபடாததால் சுத்தமான தண்ணீரில் கழுவி பருத்தித் துணியில் அழுத்தித் துடைத்தது போல் பளிச்சென்றிருந்த வானம், இதுவரை புகைமூட்டத்தில் மங்கலாகத் தெரிந்து இப்போது பளீரெனத் தென்படும் தூரத்துக் கட்டிடங்களின் காட்சி,எதையாவது புதிதாகச் செய்து தன்னைத் தானே உற்சாகப் படுத்தும் ரகசியம் தெரிந்த பேரன் சச்சித்தின் திகட்டாத மழலை, தோட்டத்தில் தனியாக மாட்டிக் கொண்ட என்னவர், ஆளரவமின்றி வெறிச்சென இருக்கும் பக்கத்துப் பூங்கா என்று பல திசைகளிலும் பயணித்துக் கொண்டிருந்தது எங்கள் உரையாடல்.சாதாரணமாக இருக்க வேண்டிய பல விஷயங்கள் அதிசயம் போல பேசு பொருளாகிறது. பால்கனியில் குடும்பமாய் அமர்ந்து மாலைக் காஃபியை ரசித்துக் கொண்டிருந்தோம்,
கோவிட் 19 புண்ணியத்தில்.
மாப்பிள்ளையிடமிருந்து சட்டென ஒரு கேள்வி வந்தது.
"ஈஸ்ட் இருக்கா?"
லாக்டவுன்னா எல்லாமே கொஞ்சம் டவுன் தான்.. அதுக்குன்னு இப்படியா? கிழக்கு எங்க போகும். வருசக் கணக்கா அங்கேயே தானே இருக்கு? என்னென்னவோ கேள்வி மண்டைக்குள் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டிருந்தது.
"ஆண்ட்டி!உங்க கிட்டத் தான். வீட்டில் ஈஸ்ட் இருக்கா?"
நம் வீடு கிழக்குப் பார்த்த வாசல் தானே என்று சொல்ல வாயெடுத்தேன்
நல்லவேளை
அவரே தொடர்ந்தார்.
"காலைல ஒரு ஈஜிப்ஷியன் டிஷ் ட்ரை பண்ணலாமா ?" என்று.அவர் சில காலம் எகிப்தில் வேலை பார்த்தவர்.
மண்டைக்குள் மணி அடித்தது.
ஓ! இது அந்ந்ந்த ஈஸ்டு!!அடச்சே...ஒளறிக் கொட்டாம இருந்தேனே நல்ல வேளையாக!!
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அகழாய்வை ஆரம்பித்தேன்.கீழடியில் உறைகிணறு கிடைத்த மாதிரி இங்கும் எதாவது கிடைக்கும். சில நிமிடத் தேடலுக்கப்புறம் ஒரு ஈஸ்ட் பாக்கெட் கண்ணில் பட்டது
பிரிக்கப் படவேயில்லை.
"ராஜ்மா இருந்தா ஒரு டம்ளர் ஊறவைச்சிருங்க" அச்சச்சோ! இந்த ராஜ்மாவே அவ்ளோவா பிடிக்காதே?
ஊறவைத்தாயிற்று.
நாம் செய்யப் போறது பீட்டா பிரெட் & ஃபல்" என்றதும் பேர் ஆவலைத் தூண்டியது .புதுசா இருந்தது. ஆனாலும் கொஞ்ஞ்சம் பயம் பயம் தான்.சிக்கனமா பொருட்களை உபயோகிக்கணும்னு ஏற்கெனவே எடுத்த முடிவு நினைவில் வந்தது.
ஒரு டீ ஸ்பூன் ஈஸ்ட்டை மிதமான சுடுநீரில் கரைத்து பத்து நிமிடம் கழித்து கோதுமை மாவில் கலந்து மாவு பிசையணும்.
ஒரு மணி நேரத்துக்கு மாவை க்வாரண்டைன்ல போடணும்.. சப்பாத்திக் கட்டைல தேச்சு ஃபுல்கா மாதிரி போட்டா நல்லா உப்பி வரும். பீட்டா ரெடியாயிரும்.
ராஜ்மாவை நன்றாக வேக வெச்சுட்டு ஸ்மாஷ் பண்ணிரணும். பத்துப் பல் பூண்டு இடிச்சுப் ப் போட்டு சீரகம் மிளகு நுணுக்கிப் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து ஆலிவ் ஆயில் கொஞ்சம் சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்தால் சிம்பிளா ரெடி ஆயிரும்."
"
தொலைக் காட்சி சமையல் நிகழ்ச்சி வர்ணணையாளர் போல ஈடுபாட்டோடு விவரித்துக் கொண்டிருந்தார்.
காண்டினென்டல் டிஷ் என்ற வகையறாவுக்கே நான் போவது அரிது. அம்மாயி ஆத்தா அம்மா மாமியாரின் பாரம்பரிய கிராமத்துச் சமையலைச் செய்வதில் தான் இஷ்டம் அதிகம்.புது ரெசிப்பி வேண்டுமென்றால் யூ ட்யூப் வருவதற்கு முன் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் தான் ஒரே வழி..
எதையாவது பார்க்க ஆரம்பித்தால் என்னவர் பீதியாகி விடுவார். "நீ நல்லா சமைக்கிறே. போதும் .இதையெல்லாம் செஞ்சு என்னை எலி ஆக்கிறாத' என்று கெஞ்ச ஆரம்பிப்பார்.அவர் கவலை அவருக்கு. அரிசீம் பருப்பு, தக்காளிச் சாதம், கொள்ளுப் பருப்பு, வேர்க்கடலைச் சட்னி முழுப் பயிறு, புதினாமல்லிச் சட்னி, தக்காளி மொளவரைச்ச குழம்பு, தேங்காய் சட்னி, தேங்காய் துவையல், நாலஞ்சு நாட்டுக் காய் பொரியல்,ராகி வடை, , முட்டை ஆம்லெட்,காளான் குளம்பு,,முட்டைக் குளம்பு, கோழிக் குளம்புன்னு அவரோட விருப்பப் பட்டியலைத் தாண்டி எதையும் சாப்பிட்டுப் பார்ப்பது அரிது.அப்படியே எதையாவது புதிதாகச் சமைத்து விட்டால் தயிர்குளம்புடன் தனியாக செட்டிலாகி விடுவார் மகராசன்.
மறுநாள் காலை 'பீட்டா-ஃபல்' ஏக அமர்க்களத்துடன் ஜோராக தயாரானது..பிசைஞ்சு வச்ச மாவு குழந்தையின் கண்ணம் போல அவ்வளவு மெண்மை. ஈஸ்ட்டின் வேலை!! தீயில் புஸ்ஸென்று உப்பி வந்த ரொட்டி வித்தியாசமாக மணந்தது.
பீட்டாவுக்குள்ள இருக்கற பைக்குள் ஃபல் வச்சு வெங்காயத்தோட சேத்து சாப்பிடணும்..
அட! வாயில் போட்டால் நல்ல ருசி. ஆனா நாக்கோட சுவை மொட்டுக்களுக்கு அது பழக்கப் பட்ட ருசியாக இருந்தது!! எதையோ நினைவூட்டியது.அப்படியே அம்மாயி செய்யும் முழுத் தட்டைப் பயிறு கடைசல். ஒரு வித்தியாசம்!! வெங்காயம் பூண்டு நல்லெண்ணெய்ல வதக்கி போடுவாங்க.!!
நம் மக்களுக்கு சோறு ருசியா வைக்கத் தெரியும். ஆனா கவர்ச்சியா ஒரு பேர் வைக்கத் தான் தெரியாது.
நெசத்தைச் சொன்னா கேலி தான் அதிகமாகும் . "என்னம்மா,கிளியோபாட்ராவே நம்ம கொள்ளுப் பாட்டி சமையலைத் தான் சாப்பிட்டான்னு சொல்லுவீங்க போல" ன்னு பசங்க கலாட்டா செய்வாங்க.
ஆனா அது உண்மையா இருந்திருக்கவும் வாய்ப்புண்டுன்னு நெனச்சிக்கிட்டேன். நம்ம கிராமத்திலிருந்து அஞ்சு கிலோமீட்டர்ல இருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிரேக்க ரோமன் நாணயங்கள் கெடைச்சிருக்கு. கண்ணாடி மணி அந்த ஊருக்கு ஏற்றுமதி ஆச்சாம். யவனர்கள் இங்க தங்கினதுக்கான ஆதாரமும் இருக்காம்.அப்ப அவங்க நம்ம சமையல் குறிப்பையும் எடுத்திட்டுப் போயிருக்க எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கு தானே?
சாப்பிட்டதும் மாப்பிள்ளை தலைமையில் ஒரு குட்டி மாநாடு நடந்து கொண்டிருந்தது..மாநாட்டின் தீர்மானம் ஒரு ப்ளசண்ட் சர்ப்ரைஸ்!!! "இன்னிக்கு உங்களுக்கு சமையலறை விடுமுறை.நாங்க தான் மதியமும் இரவும் சமைக்கப் போறோம்" என்பதே அது.
"உங்களுக்கு லாக்டவுன் வந்ததிலிருந்து ஓய்வே இல்லை. இன்னிக்கு முழு ஓய்வு" என்றதும் என் மனசுக்குள் மாமழை!! கிச்சனை நாங்க பாத்துக்கறோம்னு பசங்க சொல்வது
முதல் முறை!
மருமகன்- மாமியார் உறவு முறை மூன்று தலைமுறைகளில் எவ்வளவு மாறியாச்சு என்று அசை போட்டது மனசு.மாப்பிள்ளை எதிரில் நின்று பேசத் தயங்கும் அம்மாயி ஆத்தா காலம்.மாப்பிள்ளை முன்னாடி சமமாக உட்காரத் தயங்கும் அம்மா காலம். மகன் மகள் மாப்பிள்ளை கணவர் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கலகலப்பாக மூச்சுப் பயிற்சி முதல் சமையலறை கலாட்டா வரை சேர்ந்து செய்யும் இந்தக் காலம்...காலத்தினூடே நாம் காணும் பரிணாம வளர்ச்சி தான் எவ்வளவு ஆச்சர்யமானது.
இன்று மாப்பிள்ளையும் மகனும் மகளும் சேர்ந்து சமையல் செய்வதையும் நான் ஹால் சோஃபாவில் சர்வ நிம்மதியாக ரிலாக்ஸ்டாக புத்தகம் வாசிப்பதையும் ஆத்தா(அப்பாவின் அம்மா) பார்த்தால் என்ன ஆகும் என நினைத்தேன். அடக்க முடியாத சிரிப்பு வந்தது."இந்த அநியாயத்தை எங்கியாச்சும் கண்டிருக்கோமா"ன்னு ஆரம்பிச்சு வாயில் என்னென்னவோ வரும். மாப்பிள்ளையைப் பற்றி யாரிடமாவது பேசும் போது அவரது ஊர் பேரைச் சொல்லி அடையாளம் சொன்ன தலைமுறை அது. பெண் பேரைச் சொல்லி அடையாளம் சொன்னது அம்மா தலைமுறை. சகஜமாக பேர் சொல்லி அழைப்பது நடைமுறைக்கு வந்துவிட்டது இன்று..இது பெரும்பாலும் மாப்பிள்ளைகளின் அன்புக் கட்டளையால் நடந்திருக்கும்.
சமையலறையில் நின்றுகொண்டு மகன் யூ ட்யூப்பை சீரியசாகத் தேடியதைப் பார்த்ததும் எதோ புதுசா செய்யப் போறான் போல என்று பார்த்தால் தலைசிறந்த ஷெஃப் உதவியுடன் அவன் செய்த அரிய பெரிய காரியம், வெங்காயம் தக்காளிய மெல்லிசா வெட்டிய வேலை.கத்தியை சரியா பிடிக்க டுட்டோரியலாம்!! பேரனின்
லாக்டவுன் வீடியோ வகுப்பில் அவர்களுக்குப் பிடித்த உணவை சமைத்துப் பழக வேண்டும் என்பதை ஒரு டாஸ்க் ஆகவே தருகிறார்கள்.பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
முழுப்பயிறு கடைசலை ஒரு துளி கரம் மசாலா கலந்து தால்மக்கானி என்ற பிரபல சப்ஜி ஆவதும் அரிசீம் பருப்பு சின்ன மாறுதலுடன் பிஸிபேலாபாத் ஆவதும்....இப்படி சொல்லீட்டே போகலாம். கொங்கு மண்ணின் சமையல் சத்தானது. எளிமையானது.ருசியானது. ஆரோக்கியமானது
சோறு நல்லா வைக்கத் தெரிஞ்ச அளவுக்கு நம் மக்களுக்கு கவர்ச்சியா பேர் வெக்கத் தெரியலியே என அவ்வப்போது தோன்றுவதுண்டு. செய்யணும்!!
மதியம் பிஸி பேலாபாத் & ஆலு ஜீரா . டின்னருக்கு சப்பாத்தி ஆல்மண்ட் கார்ன் க்ரேவி என்று ஏக தடபுடல்..
இந்த சமையலறை விடுமுறை உணவை மட்டும் பற்றியதல்ல. உணர்வையும் பற்றியது. ஒரு நெகிழ்வான நாளாகவே உணர்ந்தேன். வாழ்வின் மகிழ்தருணங்கள் பட்டியலில் இன்றைய நாளுக்கு நிச்சயம் இடமுண்டு
லாக் டவுன்- டவுன் டவுன் என்று கத்த வேண்டும் போன்ற மனநிலையில் இருந்த எனக்கு இது ஒரு நல்ல மாறுதலும் ஆறுதலும்.!!
அளவில்லா அன்பில் தோய்த்து சமைத்த உணவின் சுவையை அளவிடவா முடியும்?
லாக்டவுனும் இனிதே❤️!
ப
ரசனையோடு துவங்கி, 'சமையல் குறிப்போ'வென்று ஆச்சரியப்படுத்தி, மகிழ்வாக, நெகிழ்வாக முடித்திருக்கிறீர்கள் 😊
ReplyDeleteநன்றி நீல்ஸ்!
ReplyDeleteதலைப்பு அறிவியல் கட்டுரையோ என்ற கேள்வியை எழுப்ப, வாசிப்பின் முடிவில் உணர்வு குவியலாய்.
ReplyDeleteஇழையோடும் நகைச்சுவையும், தொன்மை போற்றும் தகவல்களும் சுவாரசியமாக பின்னப் பட்டிருக்கின்றன.
உறவு மேலாண்மையை இதை விட அழகாய் சொல்ல முடியுமா என்ன!!??
சிறப்புங்க மேடம் .