மனவரி
காலை சமையல் வேலைகள் முடிந்ததும் ஒரு கப் சூடான காஃபியுடன் பால்கனி ஊஞ்சலில் உட்காந்தேன்.. நேற்று சாயங்காலத்திலிருந்து ஒரு சின்னக் கோபம் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது .நேற்று சின்னது. இன்று அசுர வேகத்தில் வளர்ந்து தலைவலியாக மாற்றம் அடைந்திருந்தது. எப்படி ஒருவரால் இப்படி பேச முடியும்? கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில். சமையலில் மனம் ஒன்றாமல் குக்கரிடம் கை சூடு வாங்கியிருந்தது.எத்தனை வருஷம் சமையல் அனுபவம் இருந்தாலும் தியானம் போல ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அலைபாய்ந்தால் சுடச்சுட இப்படிக் கை மேல்,பலன் உறுதி. அட்டகாசமான ஃபில்டர் காபியோ கீழே பள்ளிப் பேருந்துகளைக் கண்டதும் உள்ளே பாய்ந்து ஏறிச் சத்தமிடும் குழந்தைகளின் குதூகலமோ வெயிலுக்கும் குளிருக்கும் இடைப்பட்ட இதமான காலநிலையோ எதுவுமே ரசிக்கவில்லை. இவற்றையெல்லாம் ரசித்தபடி காபியை சுடச்சுட ரசித்து அருந்தும் வழக்கமான மனோநிலை அடியோடு மாறியிருந்தது. ஆறிய காபியை பார்த்தபடி யோசனை ...