தூரி நோம்பி
தூரி நோம்பி
இன்றைய நாட்களின் வெறுமையில் சிறுவயது நினைவுகள் வண்ணங்களை நிரப்பும் போதெல்லாம், மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பது தூரி நோம்பி/ ஆடி நோம்பி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஆடி 18 தான்.
ஆடி நோம்பி, தை நோம்பி, தேர் நோம்பி எல்லாம் கொங்கு விவசாயக் குடும்பங்களில் உள்ள சிறுசுகளின் மனசில் குதூகலத்தை விதைக்கும் பண்டிகைகள்.
நோம்பி அப்படின்னா கொங்கு அகராதியில் பண்டிகை .
தூரி நோம்பி மனசுக்கு பிடிக்க முதல் காரணம் பெரிய லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு கெடைக்கிற முதல் விடுமுறை !! மூணு நாள் லீவுங்கறது அவ்வளவு பெரிய சந்தோஷம்!!
அடுத்தது ஆடி நோம்பிக்கு கண்டிப்பா புதுத் துணி உண்டு. ஃப்ராக்,கௌன், ஸ்கர்ட் மாதிரி குட்டித்துணி எல்லாம் அஞ்சாறு வயசு வரைக்கும் தான்.மேலிருந்து முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே வரைக்கும் இருக்கும் பாடிபாவாடையும் இடுப்பு வரை இருக்கும் நீள ஜாக்கெட்டும் ஏழெட்டு வயசு வரைக்கும் போடுவாங்க.
தரைகூட்டற அளவுக்கு கால் வழிய பாவாடையும் கை வைத்த நீள மேல்சட்டையும் ஒரு பண்ணன்டு வயசு வரைக்கும் . அதுக்கப்புறம் தாவணி என்று தான் அம்பது வருஷத்துக்கு முன்னாடி உடை உடுத்தும் வழக்கம் கிராமங்களில் இருந்தது.
பெரும்பாலும் பூப் போட்டது அல்லது வட்டம் கோடு சதுரம்னு ஜியாமெட்ரி வடிவங்கள் போட்டதுன்னு இரண்டு வகை பாவாடைகள் தான் இருக்கும்.
பருத்தி அல்லது பாலியஸ்டர்ல பாவாடையும் ஒரே நிறத்தில் டூ பை டூல
மேல்சட்டையும் இருக்கும்.
பீஸிலிருந்து கிழிச்சு டெய்லரிடம் கொடுத்து தெச்சுப் போடறது தான் வழக்கம்.
ஆம்பளப்பசங்களுக்கு அரைக்கை சட்டை, அரை ட்ரவுசர். வீட்ல எதாச்சும் கல்யாணம் வந்தா முழுக்கால் பேண்ட் , முழுக்கைச் சட்டை எல்லாம் உண்டு.ரெடிமேட் கிடிமேட்லாம் அப்ப அவ்வளவா தெரியாது.
துணிஎடுக்க பஸ் ஏறி டவுனுக்கு போறது, அப்புறம் அளத்தி குடுக்க டெய்லரிடம் போறது, அளத்தி துணியை டெய்லரிடம் குடுத்துட்டு 'இது நெம்ப கரெக்டா இருக்கும். ஆனா கை மட்டும் ஒரு இஞ்சு நீளம் கொறைச்சுரு, உடம்பு மட்டும் அரை இஞ்சு லூஸ் வச்சிரு, ஜாக்கெட் ஒரு இஞ்சு எறக்கம் வச்சிரு , பாவாடைல இரண்டு இஞ்சு டக் புடிச்சிரு"ன்னு அவரை லூஸாக்கறது, தெச்ச துணிய டைலர் கடைல மணிக்கணக்கா காத்திருந்து வாங்கிட்டு வர்றதுன்னு ஒவ்வொண்ணும் ஒரு பெரிய கதை.
அம்மாயி ஊர்ல எங்க மணியகாரர் வளுவில உரல்ல அரிசி மாவு இடிச்சுச் சலிக்கற வேலை ஆரம்பிச்சா நோம்பி வந்தாச்சுன்னு அர்த்தம். கச்சாயம்,எள்ளுச் சீடை, லட்டு,முறுக்கு இல்லாம நோம்பி ஏது? வீட்டில் உருக்கிய தோட்டத்து பசுமாட்டின் நெய்மணமும் ஏலக்காய் கலந்த வெல்லப் பாகின் கொதிக்கும் மணமும் வீட்டுப் பெரியவங்களோட கை மணமும் போட்டி போடும் காலம் அது...
இதெல்லாத்தையும் விட புடிச்ச விசயம் நோம்பிக்கு எங்களை மாதிரியே அம்மாய் வீட்டுக்கு வந்திருக்கும் சித்தி பெரிமா வீட்டு அக்காங்க,தம்பிங்க தங்கைங்க,மாமா வீட்டுக் குட்டீஸ் எல்லாரும் ஒண்ணு சேர்றது தான்.
அம்மாவுக்கு ஒரு சித்தப்பா ஒரு பெரியப்பா. மூணு தாத்தா வீடும் ஒரே மாதிரி அடுத்தடுத்து இருக்கும். ஒரே பெரிய வாசல். வளுவில் பத்து பெண்கள். அதனால பத்துக்குடும்பங்கள் ஒரம்பரையா வந்து சேர்ந்துரும்.அதில இருபத்தஞ்சு சிறுசுக. கொண்டாட்டத்துக்கு கேக்கணுமா?
எந்த வீட்டுக்குள்ள வேணா பூந்து ஓடி தொட்டு வெளையாட்டு வெளையாடலாம். எந்த வீட்ல வேணா பலகாரம் திண்ணலாம். ஆனா குறும்பு பண்ணா எந்த வீட்ல வேணா மொத்து விழும்கறது தான் ஹைலைட்.
அம்மாய் வீட்டுக்கு வந்தாச்சு.புதுத் துணி வந்தாச்சு. வெளையாடறதுக்கு ஒரு பட்டாளமே வந்தாச்சு. பலகாரமும் இருக்கு.
ஆடி நோம்பி வந்திருமா?
வரவே வராதே!
தூரி வந்தாகணுமே?! இதுக்குப் பேரே தூரி நோம்பியாச்சே..
தூரிங்கறதை கயிற்றாலான ஊஞ்சல் னு சொல்லலாம். ஆனா ஊஞ்சல் அல்ல. கெணத்தில தண்ணி சேந்தற கயிறு அல்லது விவசாயத்தில பயன்படுத்தற வடக்கயிறில வீட்டுக்கு வெளியே மரத்திலயோ வீட்டில ஆசாரத்து விட்டத்திலயோ ஊஞ்சல் மாதிரி கட்டறது தான் தூரி.
ஊருக்குப் பொதுவா, பெரிய ஆலமரத்தில பெரியவங்களுக்காகக் கட்டற பலகைத் தூரியும் இருக்கும்.
வீட்ல கட்டற தூரில ஒருத்தருக்கு ஒண்ணுன்னு மாமாக்கள் அஞ்சு தூரி ஏற்பாடு பண்ணீருவாங்க. கயிறு பத்தாம சந்தைல போய் வாங்கிட்டு வர்றதும் உண்டு.
சமையலறையைத் தாண்டி ஆசாரத்துக்குப் போற நடைக்கிட்ட சின்னத் தூரி கடைசித் தங்கைக்கு. பெரிய ஆசாரத்தில உயரத்தில ரண்டு விட்டம் இருக்கும். ஒவ்வொன்னிலும் ரவ்வண்டு தூரி. எனக்கு, பெரிய தங்கைக்கு, தம்பிக்கு, மாமா மகனுக்குன்னு.
காலை உந்தி உந்தி வெரசா ஆடி,யார் கால் பக்கத்து ஆசாரத்து விட்டத்தை தொட்டுட்டு வருதுன்னு போட்டி வேற நடக்கும்.விட்டம் சாதாரணமா ரெண்டு ஆள் வளத்தில ஒசரமா இருக்கும்.
தூரி கட்டிக் குடுக்கறதோட முடிஞ்சிருமா மாமாக்களோட வேலை. தூரி ஆட்டி விடுங்கன்னு மாத்தி மாத்தி நச்சு பன்றதையும் சமாளிக்கணும்.
தூரில நாம உக்கார்ற இடத்தில பழைய புடவை , உரச் சாக்கு, பழைய தலகாணின்னு எதாச்சும் இதமா இருக்கும்.ஆனாலும் விடாம ரெண்டு நாளும் ஆடி ஆடி தொடையெல்லாம் தழும்பாகி ரத்தம் கண்ணிப் போய் கால் நடக்க முடியாம ஒரு தினுசா நடந்து தான் லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போவோம்.
சிறுவயசில ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடறோம் அதன் நோக்கம் என்னன்னெல்லாம் யோசிச்சதில்லை..
தூரிய விட்டா தீரன் சின்னமலை தூக்கிலிடப் பட்ட நாள்னு ஓடாநிலை போவாங்க.
பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சப்ப அதில முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கில் தான் ஆரம்பிக்கும்.
மக்கள் ஆத்தங்கரைக்குப் போறதும் ஆடிப் பாடறதும் சித்ரான்னங்கள் கொண்டு போய் சாப்பிடறதும் கல்கியின் எழுத்தில் அவ்வளவு அழகா இருக்கும்.
ஆடிப் பெருக்குன்னா
இப்படி யெல்லாம் இருக்குமா?
தூரியைத் தாண்டி நெறைய விஷயம் இருக்கும் போலன்னு யோசிச்சதே அப்பத் தான்.அப்புறம் நிறைய விஷயங்கள் அங்கங்கே கேட்டுத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
ஆத்தில புதுத் தண்ணி வந்ததும் ஆடிப் பட்டத்தில விதைக்கலாம்னு விவசாயி மனமகிழ்ச்சியோடு தண்ணிய வணங்கற நிகழ்வு தான் ஆடி 18.
நம்ம மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தத் தான் தூரி ஆடறது.
மஹாபாரதக்கதைன்னு சொல்லி ஒரு கதை ஒண்ணு உலாத்திட்டிருக்கு.எனக்கென்னமோ அது ஒரு கட்டாய இடைச் செருகலோன்னு தோணும்.
சமீபத்தில ஈரோடு வாசல் நட்பு மதுமதி கிட்ட ஆடி 18 பத்தி பேசிட்ருந்தப்ப அவங்க சொன்ன ஒரு தகவல் ரொம்பவே சுவாரசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்துச்சு.
ஆத்தங்கரையோரம் இருக்கற ஊர்ல மக்கள் ஆத்துக்கு பூஜை பண்ணி முளைப்பாரிய தண்ணில விடற பழக்கமுண்டாம். இது எதுக்குன்னு காரணம் தெரிஞ்சப்போ 'தமிழண்டா'ன்னு காலரைத் தூக்கி விட்டுக்கத் தோணுச்சு.
அந்தக் காலத்தில பெரிய பெரிய மண்மொடாவுல தான் விதை தானியமெல்லாம் யெல்லாம் சேமிச்சு வெப்பாங்க. ஆடி மாசம் வந்தா விதையோட வீரியத்தை சோதிக்க ஒரு கை விதை எடுத்து முளைப்பாரில விதைப்பாங்களாம். அது முளைச்சா அந்த விதையை பயன்படுத்தலாம். எல்லா முளைப்பாரியும் கோயில்ல கொண்டு வந்து வச்சு யாரோடது நல்லா முளை விட்ருக்குன்னு பாத்து அவர்கிட்ட மத்தவங்க விதை தானியம் வாங்குவாங்களாம்.
சரி.முளைப்பாரியை எதுக்கு ஆத்தில விடணும்?
'எங்ககிட்ட நல்ல விதை இருக்கு .எங்க ஊரு சனத்துக்கு சாப்பாட்டுக்கு பிரச்னையில்லை.ஆனா எங்கயாச்சும் ஒரு ஊர்ல மழை பேயாம இருக்கும். விதை தானியம் இல்லாம இருக்கும். இந்த தானியம் அவங்க கைக்குக் கிடைக்கட்டும்.
பட்டினி பஞ்சமில்லாம எல்லா சனத்துக்கும் வயிறு நிறையட்டும்'னு தண்ணிய வணங்கி முளைப்பாரிய ஆத்துல விடறதாம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்னு சும்மா பேச்சுக்குச் சொல்லி வைக்கலை! இதைக் கேட்டதும் மனசு நெகிழ்ந்திருச்சு எனக்கு. எவ்வளவு நாகரீகமான சமூகம் நம் தமிழ்ச் சமூகம்!! இந்த ஒரு செய்கை போதுமே தமிழன் நாகரீகத்தைச் சொல்ல! கீழடியும் கொடுமணலும் ஆதிச்சநல்லூரும் பொருந்தலும் அரிக்கமேடும் இதைவிட என்ன நாகரீகத்தை வெளிக் கொணர்ந்துவிடப் போகின்றன ஏன்று தோன்றியது....
இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய இரண்டு கிலோ அளவு விதைநெல் ஒரு அழகிய நாலுகால் கொண்ட ஜாடியில் வைத்து பாதுக்காக்கப் பட்ட நிலையில் பழனிக்கு அருகிலுள்ள பொருந்தல் அகழாய்வில் கிடைத்ததே!!கி.மு.500லேயே நெல் பயிரிட்ட சமூகம் மட்டுமல்ல இயற்கையை வழிபட்ட சமூகம் இது!
ஆத்துத் தண்ணிய வழிபட தூரி நோம்பி என்றால் ஆகாச சூரியனுக்கு நன்றி சொல்ல தை நோம்பி. பெருமையாத்தான் இருக்கு நம்ம பாட்டன் பூட்டனை எல்லாம் நெனச்சா!!
போனவாரம் மாமா வீட்டிற்குப் போயிருந்தேன்.சிறுவயது நோம்பி நினைவுகளால் நிரம்பியிருந்தன அந்தப் பெரிய வீடுகள்.
பட்டணத்தில் சனங்கள் ஏராளம். இருக்க வீடில்லை. பட்டிக்காட்டில் வீடுகள் தாராளம். இருக்க சனமில்லை. எத்தனை முரண்!எத்தனை மாற்றங்கள்!!
தூரிகட்டி ஆடிய விட்டத்தை அண்ணாந்து பார்த்ததும் புரிந்து கொண்ட மாமா 'ஏங்கண்ணு ஆடி நோம்பி ஞாயித்துக் கெழம வருது.சனிக்கிழமையே எல்லாரும் வந்துருங்க" என்றார் வாஞ்சையுடன். "வாங்க வாங்க. எள்ளுச் சீடை புடிக்கும் உனக்கு. செஞ்சு தாரேன் " என்றார் அத்தை.
எதுவும் மாற்றத்துக்கு உட்படலாம்-
சிலவற்றைத் தவிர!!
கட்டுரை படிக்கப் படிக்க, தூரி ஆடின மகிழ்ச்சி !
ReplyDeleteபசுநெய், வெல்லப்பாகின் வாசனை மூக்கைத் துளைக்குது 😊
கச்சாயம்சாப்பிடலாம். வாங்க.
Deleteஆனா கொரோனா முடிஞ்சிரட்டும்😀
மகிழ்ச்சி, மிகச் சிறப்பான மொழிநடை, வாழ்த்துகள் .
ReplyDeleteமகிழ்வும் நன்றியும்
Deleteமலர் சில விஷயங்கள் இப்போது தான் புரிகிறது
ReplyDelete😊
Deleteஆடிப்பெருக்கு கொங்கு நாட்டில் இப்படியாக கொண்டாடப்பட்டது என்பது புதிய தகவல்.... உணர்வுபூர்வமான எழுத்து... அக்காவின் வலைப்பூ விரியட்டும்
ReplyDeleteஆடிப்பெருக்கு இப்படியும் கொண்டாட பட்டது என்பது புதிய தகவல்.... கொங்கு நாட்டின் பழக்கவழக்கங்களை அனுபவித்த உணர்வு...
ReplyDeleteமகிழ்ச்சி சிவா.
ReplyDeleteஅடுத்த ஆடி நோம்பிக்கு வந்திரு. 😍