எறும்புக் குழியும் எழுத்தறிவும்

          "ஏன் வாசிக்க வேண்டும்"-சமீபத்தில்  ஒரு  தோழியின் கேள்வி.
"ஏன் சுவாசிக்க வேண்டும்?" என்ற என் மனதில் எழுந்த கேள்வியே பதிலாய் அமைந்தது.

எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடங்குகிறது நம் ஒவ்வொருவரின் வாசிப்புப் பயணமும். அதில் எவ்வளவு தூரம்தொடர்ந்து விருப்பத்துடன்  பயணிக்கிறோம் என்பது அவரவர் தேர்வு. வீட்டுப் பெரியவர்களிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கம் இயல்பாக வர நிறைய வாய்ப்புள்ளது.எனக்கும் அப்படியே தான்.

 பொதுவாக கொங்குப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஆண்குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். சமையல் செய்வதும்  மீதி நேரத்தில் காடு கரை ஆடு மாடுன்னு விவசாய வேலைகள் செய்வதும் மேற்பார்வையிடுவதும்  தான் பெண்களின் வேலை. பெரிய விவசாயக் குடும்பங்களிலும் இதே நிலை தான். ஓய்வு நேரம் ஒன்று இருப்பதும் அப்போது அவர்களுக்குப் படிக்கத் தெரிவதும் அவர்கள் புத்தகம் படிப்பதும் அரிய காட்சிகள்.எங்காவது ஓரிரண்டு முற்போக்குச் சிந்தனை உள்ள தந்தையை வரமாய்ப் பெற்றவர்களுக்கே அது சாத்தியம். ஆண்குழந்தைகளுக்கு மட்டும் தான் பிறந்ததும் ஜாதகமே எழுதுவார்களாம்!!
 அப்படி அலையில் தப்பிய  வாசிப்புத் தலைகள் எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்கள்  உண்டு.ஒன்று என் அம்மாவின் அம்மா. பாசத்தை பொழியும் என் அம்மாயி பாவாத்தாள்.
இன்னும்  இருவர் தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இன்னும்  வாசிப்பை நேசிக்கும் என் அழகான அத்தைகள். அப்பாவின் மூத்த சகோதரிகள் ருக்மணி அத்தை மற்றும் லஷ்மி அத்தை.

சமவயதுடையவர்கள் பலர் எழுத்து வாசனை அறியாமல் இருக்கும் பொழுது இவர்கள் மட்டும் எப்படிப் படித்தார்கள்?  "ஆத்து மணலைக் கீழே கொட்டி அதில விரல்ல ஆனா ஆவண்ணா எழுதச் சொல்வாங்க  வாத்தியாரு. வாய்ப்பாடு சொல்லச் சொல்வாங்க .அதையெல்லாம் சரியாச் சொல்லாட்டி அங்க ஒரு சுள்ளெறும்புக் குழி இருக்கும். அது மேல ஏறி நிக்க வச்சுருவாங்க. அப்புறம் எறும்புக் கடி தான்.அதுக்குப் பயந்துக்கிட்டு பள்ளிக்கூடமே வேண்டான்னு காடு காடா ஓடுனவங்க தான் நெறைய பேர். அப்புறம் பொட்டபுள்ள படிச்சு எதுக்காவுதுன்னு கொஞ்சம் பேரு வீட்ல படிக்கறக்கு விடலை" என்பார் அம்மாயி சிரித்துக் கொண்டே.

யம்மாடி..! எறும்புக் குழியை நெனச்சாலே பகீர்ங்குதே மனசு!இன்னிக்கு இருக்கற சட்டதிட்டங்களை நினைத்தால்...!!
ஓரளவு வசதியான பெரிய பண்ணையம் என்றாலும்  தினமும்  வயலுக்குப் போவாங்க அம்மாயி. தோட்டவேலை முடிச்சுட்டு ஆறு மணிக்கு வந்து குளிச்சு பிள்ளையார் கோவிலுக்குப் போய் தீபம் போட்டு விட்டு  வீட்டில தீபம் போட்டு பெரியபுராணத்தை எடுத்து  வாய்விட்டு படிப்பாங்க.அப்ப வளுவில் அம்மாய்க்குத் தான் படிக்கத் தெரியும்கறது அந்த வயசுக்கான ஒரு பெருமை எனக்கு!!

நானும் உடனே எதாவது ஒரு புத்தகத்தை, பெரும்பாலும் கல்கண்டு இதழை, எடுத்து வாசிக்க ஆரம்பித்திருப்பேன். நினைவு தெரிந்து எனக்கென அப்பா வாங்கி வந்த சிறுவர் இதழ்(!) கல்கண்டு தான். இப்படி ஆரம்பித்தது தான் வாசிப்புப் பழக்கம்.

"என்னைக் கொஞ்சம் மாற்றி உன்னைக் கொஞ்சம் ஊற்றி" என்ற வரிகள் புத்தக வாசிப்பு குறித்து எழுதப் பட்டதோ என்று தோன்றும்.

 வாசிப்பு என்னை மாற்றுவது இன்றும் பல்வேறு விதங்களில் தொடர்ந்து நடந்து வருவது.ஆனால் அதன் ஆதிப் புள்ளி என்றால்  பசுமரத்தாணியாய் புகைபடிந்த ஓவியமாய் மனதின் ஆழத்தில் பதிந்துள்ள நிகழ்வொன்றைச் சொல்லலாம்.

  நான் முதல் மூன்று வகுப்புகள்  படித்தது  அம்மாயி  ஊரிலிருந்த புனித சவேரியார் நடுநிலைப் பள்ளி. நற்செய்தி என்று ஒரு சிறு புத்தகம் அங்கு விற்கப் படும். இருபது பைசா விலை. புத்தகத்தை வாங்க வீட்டில் கடும் 144. அது ஒரு மதத்தை பரப்பும் பத்திரிக்கை‌ என்பது அவர்கள் கணிப்பு. 
ஆனால் என் எண்ணமெல்லாம் அதில் வரும் சித்திரக் கதையிலேயே இருக்கும்
பள்ளிக்குக் கிளம்பும் போது நொறுக்குத் தீனிக்கென இரண்டு அல்லது ஐந்து காசுகள் தினமும் கிடைக்கும்.

பள்ளியின் முன்பு பரந்து விரிந்திருக்கும் ஆலமரநிழலில் விரித்திருக்கும் கட்டில் கடையில் நெல்லிக்காயும் கம்மர்கட்டும் எனக்கு மிகப் பிடித்தவை.அதுவும் நெல்லிக்காய் தின்னப்புறம் தண்ணீர் குடிக்கும் போது ஒரு சுவை இருக்குமே.அலாதி!

நற்செய்தி நினைவில் வந்ததும் இவற்றை வாங்காமல் மனதை அடக்கி ஒருவழியாக 20 பைசா சேர்ந்ததும் புத்தகம் வாங்கி விடுவேன்.

வாங்குவதா பெரிய விஷயம். வீட்டில் வைத்துப் படிக்க முடியாதே.மூத்த குழந்தை என்றால் திட்டும் பெரிதாகவே விழும்.
பள்ளியில் உணவு இடைவேளையில் பரபரவென பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருப்பேன். எட்டு பக்கங்கள் தான் இருக்கும்.
படித்ததும் நான் சொல்லும் கதையைக் கேட்க தோழியர் கூட்டமொன்று பவ்யமாகக் காத்திருக்கும்!;
மாதம் ஒரு புத்தகம்.
 அடுத்த புத்தகம் வருவதற்குள் முழுதும் மனப்பாடமாகியிருக்கும் திருட்டுத் தனமான வாசிப்பிலேயே...

அதில் வந்திருந்த ஒரு சிறுகதையொன்று சிந்தனைக்குள் சிக்கிக் கொண்டது. பிறருக்கு உதவி செய்வது பற்றிய கதை அது.

அது ஒரு தீபாவளி முடிந்த மறுநாள். அப்போது தான் பள்ளி விட்டுத் திரும்பியிருந்தோம்.. வீட்டு வாசலில் யாரோ அம்மாயியை அழைக்கும் சத்தம். கூடவே ஒரு சிறு பெண்ணின் பழக்கமான  அழுகுரல். "பள்ளத்துக் கருப்பராயன் மேல சத்தியமா நா எடுக்கலைமா. அவங்க தான் குடுத்தாங்க"என்று அழுதுகொண்டே பேசும் குரல்.
அடுத்த நிமிஷம் 'மலர் எங்கே?!' என்று கோபக் குரல்.

பயந்து கொண்டே மெல்ல வாசலுக்கு வந்தேன்.
என்னோடு படிக்கும் ராஜாத்தியும் அவள் அம்மாவும்  கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் என் புதுத் துணி.
"உன்னோட துணி ராசாத்தி கைல எப்படி வந்துது?" கோபமாய்  வந்தது அம்மாவின் கேள்வி.

"நாந் தாம்மா குடுத்தேன்" சொல்லி முடிக்கவில்லை
 . மண்டையில் ஓங்கி ஒரு குட்டு விழுந்தது.
"இந்தப் பன்னாட்டு ஆரு கொடுத்தது? எல்லாம் அம்மாயி தர்ற செல்லம்" என்று இன்னொரு அடி விழுந்தது.

துணியை திண்ணை மேல் வைத்து விட்டு அவர்கள் கிளம்பினார்கள். அடுத்த பாட்டுக்கும் பூசைக்கும் குடும்பம் தயாராகிக் கொண்டிருந்தது.
"மூத்தது மோளை. இளையது காளை"ன்னு அடிக்கடி  வந்து விழும்  தன்னம்பிக்கை பொன்மொழி அன்றும் வந்து விழுந்தது.என் கண்களில் கண்ணீர்.

நற்செய்தியில் வந்த ஒரு சிறுகதைதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். தேவைக்கு மேல் நம்மிடம் இருக்கும் பொருட்களை இல்லாதவர்க்குத் தருவதே உண்மையான மகிழ்ச்சி என்று சொல்லும் ஒரு அழகான  சிறுகதை அது.

அன்று பள்ளிக்கூடம்  விட்டு கூட்டமாக வந்து கொண்டிருந்தோம்.இரண்டு பர்லாங் தூரத்தில் இருந்தது பள்ளி. எட்டாம் வகுப்பு வரை இருக்கும் நடுநிலைப் பள்ளி. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை படிக்கும்  எல்லோரும் கும்பலாக ஜாலியாக பேசிக் கொண்டு  குறுக்கு வழியில் வயல் வரப்பு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வாய்க்காலில் ஓடும் தண்ணிக்குள் காலை நனைத்தபடி நடப்பதிலொரு இன்பம். மில்லுக்கார மாமா தோட்டத்தில் சூரியகாந்தி போட்டிருந்ததை அதிசயமாகப் பார்த்த காலமது. காத்தால கெழக்கால  திரும்பியிருந்த பூ இப்ப எப்பிடி மேக்கால திரும்புச்சு? ஓயாத  கேள்விகளும் பதில்களும்  எங்களுக்குள்.
தங்கநிற சூரியகாந்தியைக் கடந்து வரும்போது நான் "என் தீபாவளிப் பாவாடை இதே கலர் தான். மஞ்சளும் மரக்கலரும். உன்னோடது என்ன கலரு?" என்றேன்
ராசாத்தியிடம்.என்னோட பெஞ்ச் மேட் மட்டுமல்ல எங்க தோட்டத்து மரமேறியின் மகளும் கூட.

பதில் இல்லை. அவள் கண் கலங்கியிருந்தது. "துணி எடுக்கலீங் எனக்கு. தை நோம்பிக்கு பாக்கலாம்னு சொல்லீருச்சுங் அம்மா. ஊருக்கு போனாலும் ஊனிபார்ம் தானுங் " என்றாள் சோகமாக.

எனக்கு நான் படித்த சிறுகதையும் என்னிடமிருந்த  ஊருக்கு போடறமாதிரி இருந்த நாலஞ்சு புது துணிகளும் நெனப்பில் வந்தது.

வீடு வரும் வரை எதேதோ யோசனை.
ஊருக்குள் புள்ளார் கோயில் ஆலாமரம் வந்ததும் அவள் வேறு பிரிவில் திரும்புவாள் வழக்கமாக.

 "எங்க வீட்டுக்கு போய்ட்டு போலாம் வா" என்று பின்பக்க கதவு வழியாக துணி காயப் போடற ஆசாரத்துக்குக் கூட்டிப் போனேன்.அங்கு  யாரும் இல்லை. துவைத்த துணிகளுடன் என் துணிகளும்  காய்ந்து கொண்டிருந்தன. தீபாவளி துணியை விட்டுட்டு வேறு இரண்டு பாவாடை சட்டையை அவள் கையில் கொடுத்து " நீ வெச்சுக்க ஊருக்கு போனா போட்டுக்க" என்றேன். அவள் முகத்தில்  மத்தாப்பாய் வெடித்த  சிரிப்பு..!துணிகளை  வாங்கி மஞ்சப்பையில் திணித்துக் கொண்டு ஓடினாள். எனக்கு இனந்தெரியாத திருப்தியும் சந்தோஷமும்.கூடவே கொஞ்சம் பயமும் . யாரிடமும் இதைச் சொல்லவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தான் மேற்கண்ட நிகழ்வு.
அழுது கொண்டே போன ராசாத்தியைப் பார்க்க பாவமாக இருந்தது. 
கொட்டு அடி என்பதெல்லாம்  எனக்கு கிடைப்பது மிக மிக அரிது. அம்மா அப்பா எப்போவாவதுதான் வருவார்கள் .மாமாக்கள் இருவரும்  படு செல்லம்.அடி வாங்குவது எப்பவாவது நடப்பது. அடி தந்த வலியை விட நான் செய்தது தவறோ என்ற  அச்சமே அதிகமாக வலித்தது.

ராத்திரி  தூக்கத்திலும் இதே நெனப்பு.பக்கத்தில் படுத்திருந்த அம்மாயி '"ஏந் தங்கம் தூங்கிலியா" என்றவாறு  தலையைக் கோதிவிட்டபோது அழுகைதான்  வந்தது. அம்மா என்றே சொல்வதே வழக்கம்.
"நாஞ் செஞ்சது தப்பாம்மா?"
"இல்லாதவங்களுக்கு தர்றது நல்லது தான். ஆனா நீ யாரையுமே கேக்காம செஞ்சது தான் தப்பு.நாளைக்கு அந்தப் பொண்ணை வரச் சொல்லி நாமளே ஒரு துணியைத் தரலாம். இப்ப  நீ தூங்கு" என்ற போது மனசு சமாதானமானது.

அடுத்த ரெண்டு நாளில் ராசாத்தியின் அம்மாவையும் ராசாத்தியையும்  வரச் சொல்லி  ஒரு துணியை அம்மாயிடம் வாங்கி அவளுக்குத் தந்த பிறகு தான் எனக்கு நிம்மதி.
பிஞ்சு மனம் வாடக்கூடாது என்ற அம்மாயியின் அக்கறை அவரது வாசிப்பு தந்த குணமாகவும் இருக்கலாம்.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாசிக்கும் எழுத்துக்கள்  மாற்றத்தை விதைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. 

புத்தகங்கள் சொல்லும் கருத்துக்கள் எனக்கு நெருக்கமான ஒரு தோழி சொல்லும் அறிவுரையாகவே தோன்றும். ஆனால் நெருக்கமானவர்கள் சொன்னால் கூட அறிவுரையை நான் அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்கிறோமா என்ன?

முகத்தை தினமும் கண்ணாடியில் பார்க்கிறோம். மனதைப் பார்க்கிறோமா?
நம் மனதை  நாமே பார்த்துக் கொள்ளும் கண்ணாடி தான் புத்தகங்கள்.. வாசிப்பின் மூலம் நம்மை நாமே சரிசெய்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் நிறைய அமையும்

ஈரோடு வாசலின் வாசல் வாசிக்கிறது திட்டம் மூலம் தொடர் வாசிப்பு இப்பொழுதும் சாத்தியமாகி வருகிறது எனக்கு.

வாசிப்பும் சுவாசிப்பும் வேறல்ல என உணரும் வேளையில் வாசிப்பு ஒரு வரம் மட்டுமல்ல  தவமும் கூட!!

Comments

Popular posts from this blog

உணவல்ல உணர்வு!

தூரி நோம்பி

சகிப்பதேன் சகியே..?!